Categories
எனது தமிழ்!!!

உலக காதலர்களுக்கு

இன்றைய காதல்
___________________________________

எப்போதும் அலை பாயும் என் கண்கள்
உன்னைக் கண்டவுடன் கட்டுன்று கிடக்கும்
மாயமென்ன?
மற்றவரிடம் காட்டும் கோபத்தை
உன் மீது காட்ட முடியாததன்
மர்மமென்ன?
கடன் வாங்கியாவது உன் ஆசையை
நிறைவேற்றத் துடிக்கும்
சேதியென்ன?
உன்னோடு பேசிக் கொண்டு இருந்தாலே
பசி, தூக்கம் மறந்து போவதன்
செய்தியென்ன?
செல் பேசியின் தாக்கம் நமக்கு
மட்டும் விதி விலக்கா என்ன?
உனது செல்லக் குறளை செல்
பேசியில் கேட்ட நேரங்களே அதிகம்.
முகம் பார்த்துப் பேசும் உன்னை
முத்தமிடத் துடிக்கிறதே
என் கண்கள்!!!
இதன் பெயர் தான் காதலோ?
காதலர் தினத்தின் நினைவாக
இதனை எழுதுகிறேன்
காதலின் காதலனாக!!!

By intrepidkarthi

I am Karthikeyan, working as a software professional, interested in Travelling, Bike riding, PC Gaming, Reading Novels, Blogging, Writing thamizh poems.

1 reply on “உலக காதலர்களுக்கு”

“ஆதலினால் காதல் செய்வீர்”
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காதல் எங்கள் மத்தியில் இருந்தது. பின்னர் குழந்தைத் திருமணம் நடைமுறைக்கு வர, எங்கள் மத்தியில் காதல் அருகிவிட்டது. இன்று நாங்கள் காதல் அற்றவர்களாக மாறிவிட்டோம்.
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன், அரசாட்சிகளின் அடித்தளமான உறுதியான சமூக அடுக்கதிகாரம், சாதி சார்ந்ததாக மாறிவிட்டது. இந்தியாவில் சாதி அதிகாரமும், சாதிப் பிரிவினையும், படு மோசமாக இருந்தன. சாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்பட்டு, அதற்காகவே குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக நாங்கள் காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே. “ஆதலினால் காதல் செய்வீர்” என அறை கூவியவன் பாரதி.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் பூராக நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள கடந்த இரண்டாயிரம் வருடங்களாக எங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
கல்யாணப் பொருத்தத்தில் சாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றை பார்த்த நாங்கள், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா? என்று பார்த்தது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. எங்கள் பாரம்பரிய கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கின்றோம். ஒரு ஆணும் பெண்ணும் தமக்கிடையே அன்பைப் பகிருந்தோறும், இருவரும் நெருங்கிப் பழகுந்தோறும், உள்ளத்தையும் அன்பையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
எங்கள் எண்ணங்களோடு இணைவு இல்லாத ஓருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணைவு இல்லாத ஒருவருடன் கல்யாணம் எப்படி வருடக் கணக்கில் தொடர முடியும்?
பகிர்ந்துகொள்ள ஒரு பொதுத் தளம் இல்லாத நிலையில், நம் மத்தியில் கணவன் மனைவிக்கிடையில் வெறுமையான உரையாடல்களுடன் எங்கள் கல்யாணங்கள் எல்லாம் வெறும் ஒப்புக்கு போலியாக வெறும் சம்பிரதாயங்களுக்கும் கடமைக்கும் கணவன் மனைவி எனக் குறுகி, இறுதி வரை தொடர்கின்றன.
கல்யாணமாகி கொஞ்சக் காலம் சென்ற பின் எங்கள் கணவன் மனைவிக்கிடையில் “சாப்பாடு தயாரா?”, “பிள்ளைகள் என்ன சாப்பிட்டார்கள்?” என சில சொற்களுக்கு மேல் அவர்களுக்கிடையில் உரையாடும் குடும்பங்கள் மிக மிக அரிது.
கணவன் மனைவிக்கிடையில் மனம் விட்டுப் பேசி காதல் வளராதலால், வாழ்க்கை பூராக காதலுக்கான நீங்காத ஏக்கத்துடன், தொலைக்காட்சியிலும், கணணித் திரையிலும், கதை புத்தகங்களிலும் வெறும் கற்பனையில் காதலை பார்த்துவிட்டு, நாங்கள் மரணித்துப் போய்விடுகின்றோம்.
காதல் என்பது ஒருநாள் விடயமல்ல. ஒவ்வொரு நாளும் காதல் உயிர்ப்போடு இருக்கவேண்டும். ஒருபோதும் வற்றாத ஜீவநதி அன்பு மட்டும்தான். உண்மையான காதலில்தான் அன்பு இருக்கும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதும், குதர்க்கமாகப் பேசுவதும், குத்திக்காட்டுவதும், போலியான உறவுகளில்தான் இருக்க முடியும். கல்யாண வாழ்வில் காதல் இல்லாத காரணத்தால் பல ஆண்கள் விபச்சாரிகளை தேடிப்போனார்கள். நாங்கள் பெரும்பாலும் எங்கள் நண்பர்களோடுதான் மனம்விட்டு பேசுவோம்.
தம்பதிகள் கோபப்படும்போது , அவர்களின் இதயங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து விடுவதால் அந்த இடைவெளியினில் பேசுவது கேட்க வேண்டும் என்பதற்காக, இருவரும் சத்தமாக உரத்த குரலில் பேசுவர். எவ்வளுக்கெவ்வளவு கோபம் கூடுகின்றதோ, அவ்வளவு சத்தம் தேவைப் படுகிறது., அன்பு வயப்பட்ட காதலர்கள் பேசும் போது உரக்க சத்தம் போட்டு பேச வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் அவர்களின் இதயங்களுக்கு இடையேயான இடைவெளி மிகவும் குறைந்து விடுகிறது. மனமொத்த இணைபிரியா காதலர்கள் தமக்குள் பேசவேண்டிய அவசியம் கூட இருப்பதில்லை, ஏனெனில் அங்கு இதயங்களுக்கு இடையே இடைவெளியே இருக்காது. இதயங்கள் இடமாறிவிட்ட காதலர்களுக்கு வார்த்தைப் பரிமாற்றமே தேவைப்படுவதில்லை,
இறுகிப்போன எங்கள் கலாச்சாரத்தில், இன்னமும் காதல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றாக இருப்பதனாலேயே, அது இரகசியமானதாகவும், மற்றவர்களால் வேவு பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் இருக்கின்றது. இன்னமும் உண்மையான காதல் என்றால் என்னவென்று எங்களுக்கெல்லாம் தெரியாததால் ஒரு ஆணும் பெண்ணும் தற்செயலாக சற்று அருகில் பழக நேர்ந்தாலே அதனை காதல் என எண்ணி, கல்யாணம் செய்து கொள்கின்றார்கள். இதனால் காதலை நிதானமாக அணுக முடியாத நிலையில், கண்டவுடன் ஏற்பட்ட வெறும் கவர்ச்சியே, கல்யாணமாக நிறைவேறி பின்னர் தீராத பிரச்சனைகளாக இறுதி வரை தொடர்கின்றன.
காதலை சரிவர அணுகவும், நிதானமாக முதிர்ச்சியுடன் எதிர்கொள்ளவும், தேவையான அனுபவத்திற்கு காதலை சாதாரணமாக அணுகும் பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ளும் கலாச்சாரம் தேவை. காதலை சாதாரணமாக அணுகும் கலாச்சாரம் ஆரோக்கியமான சமூகங்கள் மத்தியில் இருக்கின்றது. பொருத்தமான கணவன் மனைவி உறவுகளே நிறைவான ஆரோக்கியமான ஒழுக்கமான சமூகங்கள் உருவாக வழிசமைக்கும்.
– நல்லையா தயாபரன்

Leave a Reply

Your email address will not be published.